பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 729 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று அழிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் குறித்த கொக்கேய்ன் போதைப்பொருள் பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலுள்ள கொக்கேய்ன் போதைப்பொருளே இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த போதைப்பொருட்கள், சபுகஸ்கந்த களஞ்சியசாலையில் திரவமாக மாற்றப்பட்டு பின்னர் புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு எரிக்கப்படவுள்ளன.
முன்னதாக, கடந்த வருடம் ஜனவரி 15ஆம் திகதியும் இவ்வாறு 920 கிலோகிராம் போதைப் பொருள் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைபொருட்களே இவ்வாறு அழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.