இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் தங்கியிருக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று சிறிலங்கா காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நிரந்தர குடியிருப்பாளர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள், அரசு அல்லது தனியார் வளாகங்கள், கட்டுமான ஸ்தலங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்கள் இதன்போது பெறப்பட உள்ளன.
இந்த வேலைத்திட்டம், இன்று, நாளை மற்றும் நாளை மறுதினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கொழும்பு நகரில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலே குறிப்பிட்டுள்ள வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ தமது தகவல்களை வழங்கும் படிவம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவின்படி தயாரிக்கப்பட்ட இந்தப் படிவத்தைப் பெற்று, சரியான தகவல்களை உள்ளீடு செய்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறிலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.