யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவந்த நிலையில் 60 வயதான குகதாசன் – ஜெயராஜகுமாரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணும் தாயாரும் நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்துவந்த நிலையில், கடந்த 5 வருடங்களிற்கு முன்னர் நாட்டுக்கு திரும்பியுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் இருவரும் தமது சொந்த ஊரான யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் யாழ்குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இருவரும் வெளியே செல்வது குறைவு என்றும், அயலவர்கள் கூறுகின்றனர்.
எனினும் கடந்த மூன்று நான்கு தினங்களாக அவர்களின் நடமாட்டம் இருக்கவில்லை என கூறும் அயலவர்கள், வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து , அது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்றிரவு 11 மணி அளவில் அங்கு சென்ற பொலிஸார் வீட்டை உடைத்து பார்த்தபோது மகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் தாயார் மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டவர் என்பதனால் அவரை மீட்ட பொலிஸார், தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலைக்கு தாயாரை அனுப்பிவைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பெண் உயிரிழந்து நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.