web log free
January 13, 2025

தமிழக படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி விபத்து

நடுக்கடலில் தமிழக படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி விபத்துக்கு உள்ளாகிய நிலையில் குறித்த படகில் உயிருக்கு போராடிய 7 ராமேஸ்வரம் மீனவர்களை சக மீனவர்கள் மீட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,,

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (19) 500 க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு கச்ச தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து விட்டு இன்று (20) அதிகாலை 2 மணியளவில் கரை திரும்பும் போது கச்ச தீவு அருகே கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வர மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை கைது செய்யும் நோக்கில் அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இதன் போது உயிருக்குப் பயந்தும், படகு பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்தால் மீனவர்கள் தப்பியோடிய நிலையில் மீனவர்களின் படகுகள் மீது ரோந்து கப்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் விரட்டியடித்துள்ளனர்.

இதன் போது மீனவர் வஸ்தியான் என்பவர் படகு மீது கடற்படையின் கண்காணிப்பு கப்பல் மோதிய நிலையில் குறித்த படகு நடுக்கடலில் மூழ்கியது.

குறித்த படகில் இருந்த சுரேந்திரன், ஜெயபால் , ஆகாஷ், டேனியல், ராஜா, ஜெபஸ்தீயான் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்தும், எதிர்வரும் 21ஆம் திகதி (நாளை) மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் உடனடியாக மீனவ அமைப்புக்களை சந்திக்க விரும்புவதாக கூறியதை அடுத்து மீனவர் சங்க பொறுப்பாளர்கள் சென்னைக்கு விஜயம் செய்துள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd