கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று (20) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல வைத்தியசாலை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது வைத்தியசாலையின் கட்டிடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ, பின்னர் பல இடங்களுக்கு வேகமாகப் பரவியது.மருத்துவமனையின் பணிப்பாளர் சபையினர் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திலிருந்து இராணுவ தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தின் போது நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீயினால் பல மருத்துவமனை உபகரணங்களும் மருத்துவ உபகரணங்களும் எரிந்து நாசமாகிவிட்டன என்பதுடன் இதுவரை எந்த மதிப்பீடும் தெரிவிக்கப்படவில்லை.
தீ ஏற்பட்டமைக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.