இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமைமீது அதிருப்தியுற்றுள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் கொழும்பில் ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் இ.தொ.காவின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய தீர்மானங்களை எடுப்பவராக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ள நிலையில் பல சிரேஷ்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தாது தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் கட்சியில் தமக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனவும் சிரேஷ்ட தலைவர்கள் அதிருப்தியுள்ளனர்.
இதுகுறித்து கொழும்பில் அண்மையில் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ள அவர்கள் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் விரைவில் தீர்மானமெடுப்பது சிறந்ததாக அமையுமென ஆலோசித்துள்ளனர்.
மக்களுக்கும் கட்சிக்கும் இடையில் பாரிய விரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாலும் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் சூழல் எழுந்துள்ளதாகவும் சிரேஷ்ட தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.
விரைவில் பல அதிரடி தீர்மானங்களை இ.தொ.காவின் சிரேஷ்ட தலைவர்கள் எடுப்பார்கள் எனவும் அறியமுடிகிறது.