web log free
December 22, 2024

குடும்பத்துடன் இந்தியா சென்ற இலங்கையர்கள் 8 பேருக்கு சிக்கல்

கடலூர் அருகே கிஞ்சம் பேட்டை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 3 பெண்கள் உள்பட 8 பேர் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் தங்கி இருந்ததை குறித்து கியூ பிரிவு பொலிசாருக்கும், கடலோர காவல் படை பொலிசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில மாதத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு உறவினர்கள் வீட்டிலும், லாட்ஜிலும் தங்கியுள்ளனர். பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் கிஞ்சம் பேட்டையில் தங்கி வந்ததாகவும் கூறினார்கள். பின்னர் அவர்கள் முறைப்படி விசா வைத்துள்ளார்களா? என்பதனை கியூ பிரிவு பொலிசார் சோதனை செய்தனர்.

அப்போது விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆகியும் கடலூர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் விசா கிடைப்பதற்காக பதிவு செய்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் க்யூ பிரிவு பொலிசார் மற்றும் கடலோர காவல் படை போலீசாரும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இது சம்பந்தமாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 பேரையும் தீவிரமாக கண்காணிப்பதோடு இவர்களுடன் வேறு யாரேனும் வந்து உள்ளார்களா? அல்லது எதற்காக இவர்கள் இங்கு வந்துள்ளனர்? விசா காலம் முடிந்தும் ஏன் இங்கு தங்கி உள்ளார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd