ஐபிஎல் 2022 தொடரை நடத்த பிசிசிஐ அனைத்து விதமான வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் இந்த சீசனுக்கான ஏலம் சிறிய அளவில் அல்லாமல் மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.
வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்கும் 1214 வீரர்களை தங்கள் அணிகளில் எடுக்க 10 அணிகளும் போட்டி போட உள்ளன.
இந்தியாவில் நடக்குமா : என்னதான் ஐபிஎல் 2022 தொடருக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தாலும் இந்த தொடர் வழக்கம்போல இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற கேள்வி தொடர்ந்து நிலவி வருகிறது. ஏனெனில் கடந்த வருடம் இந்திய மண்ணில் தொடங்கிய ஐபிஎல் தொடர் கரோனா பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு அதன்பின் பல தடைகளுக்கு பின் துபாயில் ஒரு வழியாக நடைபெற்று முடிந்தது.
அதே போன்றதொரு சூழ்நிலை இப்போதும் இந்தியாவில் நிலவி வருவதால் திட்டமிட்டபடி ஐபிஎல் 2022 தொடர் இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை வரும் ஏப்ரல் மாதம் நிலைமை மோசமானால் சென்ற வருடம் போலவே துபாயில் இந்த தொடர் நடைபெறும் என தெரிகிறது.
அதே சமயம் ஐபிஎல் தொடரை நடத்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால் வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்தினால் அதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு கட்டணம் மற்றும் வரி உட்பட பல்வேறு செலவுகளை பிசிசிஐ சந்திக்க நேரிடும்.
2 இடங்கள்: எனவே ஐபிஎல் தொடரை இந்திய மண்ணிலேயே நடத்த பிசிசிஐ முழு முயற்சிகளை எடுத்து வருகிறது. வழக்கமாக நடைபெறும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஐபிஎல் தொடரை நடத்தினால் அதற்காக இந்த நகரங்களுக்கு இடையே வீரர்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும்.
அப்படி பயணங்களை மேற்கொள்ளும் போது ஏதோ ஒரு வகையில் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த வருடம் “ஐபிஎல் தொடரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத்” ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களுக்கு அனுமதி : அதன்படி மொத்தம் 74 போட்டிகள் அடங்கிய ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முழுவதும் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்கடே மைதானம், ப்ரோபோர்ன் மைதானம், நவிமும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே ஆகிய 4 மைதானங்களில் நடைபெற உள்ளது.
அதன்பின் நடைபெற உள்ள பிளே ஆப் சுற்று மற்றும் பைனல் ஆகிய போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இம்முறை தற்போதைய நிலைமை இப்படியே தொடரும் பட்சத்தில் 25% ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக காண மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.