அக்கரபத்தனை பசுமலை தொடக்கம் நாகசேனை வரை உள்ள குறுக்கு வீதி பல கோடி ரூபா செலவில் கார்பட் இட்டு புனரமைக்கப்பட்டமைக்காக பொது மக்கள் அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.
பசுமலை தொடக்கம் நாகசேனை வரை ஆறு கிலோமீற்றர் வரை கொண்ட குறித்த வீதி கடந்த காலங்களில் புனரமைக்கப்பட்ட போதிலும் சுமார் 3 கிலோமீற்றர் பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.
இதனால் இந்த பிரதேசங்களில் வாழும் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்தனர்.
குன்றும் குழியுமாக காணப்பட்ட குறித்த வீதியில் மழைக்காலங்களில் நீர் நிறைந்து வழிவதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இந்த பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
பெல்மோரல், கிரன்லி மேல் பிரிவு கீழ் பிரிவு, டெல், நாகசேனை, மவுசாகல்ல, தலங்கந்த, ஹில்டன்ஹோல்ட், ராணிவத்த, உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்து சுமார் 5000 மேற்பட்ட குடும்பங்கள் குறித்த வீதியினையே தமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.
குறித்த வீதியினை புனரமைத்து தருமாறு அக்கரபத்தனை பிரதேசசபையின் உறுப்பினர் விவேகாநந்தன் குமார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் வைத்த வேண்டுகோளுக்கமைவாக பொது மக்களின் நலன் கருதி சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபா செலவில் வீதி புனரமைக்கப்பட்டதாகவும் இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் மற்றும் அரசாங்கத்திற்கு பிரதேசத்தின் சார்பாக நின்றியினை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உதவி செயலாளர் சிவபிரகாசம் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.