web log free
September 19, 2024

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கஞ்சா சிக்கியது

 


விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் உத்தரவின்பேரில், அண்மையில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாகை அருகே கடலோரக் கிராமமான அக்கரைப்பேட்டையிலிருந்து சிலர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தூர் ரவுண்டானா அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லோடுவேனை மறித்தனர்.

அப்போது லோடு வேனிலிருந்த தவுடு மூட்டைக்குக் கீழே 250 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முன்னதாக வந்த இரண்டு கார்களையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த கஞ்சா பொட்டலங்களை சந்திரசேகர் என்பவர் மூலம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகம், அலெக்ஸ் பாண்டியன், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சேகர், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை (500 கிலோ) பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு லோடு வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி.ஜவகர் கூறுகையில், ``கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் செல்போன் எண்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, கார்கள் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் சிலர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை போலீஸார் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.