கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்க பிரஜையுமான பசில்ராஜபக்ஷ கூறியிருப்பது தற்போது சர்சையாகியுள்ளது .
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை,சுயாட்சி போன்றவற்றை மையமாக கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்.
ஆனால் 2005 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாக போராட்டத்தை முன்னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத்தத்தை முன்னெடுத்து செல்வதற்காக பல கோடிகளை செலவிட்டு ஆயுதங்களை கொள்வனவு செய்தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வேண்டியதாக கூறுகின்றார்கள்.
ஆனால் பசில் ராஜபக்சவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும் அமெரிக்க பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவுக்கும் (Gotabaya Rajapaksha)தெரியும். அன்றைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்க பிரஜைகளாக இருந்தவர்கள்.
அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது. யுத்தத்திற்காக கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனித படுகொலைக்கும் ,மனித உரிமை மீறலுக்குமாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப்பட்டது என்பதுதான் முக்கியமான விடயம்.
எனவே இவ்வாறான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றியதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலையில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது ,எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலமை இருக்கிறது நாளாந்தம் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது ,அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள்ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது.
ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை தேவை. ஒரு பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்க பிரஜை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசாரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.