பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த நால்வரையும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணயில் விடுவிக்குமாறு
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி, நேற்று (02)
உத்தரவிட்டார்.
மேலும், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்
கையொப்பமிடுமாறும் கட்டளை பிறப்பித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அரசால் தடைசெய்யப்பட்ட
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தையிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர்
பிரபாகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பேஸ்புக்கில் தரவேற்றம் செய்த
குற்றச்சாட்டில் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.
கே.ஜெகன், வை. யோகேஸ்வரன், டபிள்யூ. விவேக், கே. சோபானந்தன் ஆகியேர்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின்
ஆலோசனை கிடைக்கும் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு
எடுக்கப்பட்டபோது சட்டமா அதிபர் ஆலோசனைக்கமைய பிணையில்
விடுவிக்கப்பட்டனர்.