அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதை சமாளிக்க பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்று வருகிறது. கடந்த மாதம் உணவுப்பொருள் இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசுக்கு ரூ.6700 கோடி கடனுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.
இந்நிலையில் தற்போது இலங்கைக்கு தேவையான எரிபொருட்களை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் இல்லாமல் அனல் மின்நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் முக்கிய நேரங்களில் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சீர் செய்ய, நாட்டின் எரிபொருள் தேவைக்காக பெட்ரோல், டீசலை வழங்குமாறு இலங்கை அரசு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சு வார்த்தையில் இலங்கைக்கு சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.