web log free
December 22, 2024

ஐ.நா மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தன் அனுப்பியுள்ள அவசர கடிதம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நடைமுறையை செயற்படுத்துவதாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்ததாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 12 வருடங்கள் கடந்தும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை 46/1 தீர்மானம் உள்ளடங்களாக 07 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், இலங்கை அரசாங்கமும் பெருமளவுக்கு அமுல்படுத்தப்படாத கடப்பாட்டு அறிக்கைகளை விடுத்துள்ளதாக இரா. சம்பந்தன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் நடைமுறையை செயற்படுத்தாத அரசாங்கம், இராணுவமயப்படுத்துதல், சமூக மற்றும் ஊடகத் துறையினர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உயிரிழந்த உறவுகளை நிறைவுகூருவோரை புதிதாக கைது செய்வதோடு அரசியல் கைதிகளை கால வரையறை அற்று தடுத்து வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு எனும் போர்வையில் இடம்பெறுகின்ற காணி சூறையாடல்களையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்துள்ளார்.

ஐக்கிய மற்றும் பிரிபடாத இலங்கைக்குள் வட, கிழக்கு மாகாணங்களில் சுய மரியாதையோடும்  கன்னியத்தோடும் பாதுகாப்புடனும் தமிழ் மக்கள் வாழ்வதை உறுதிப்படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கத்தை தூண்டுதல் செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமது கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd