ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்றுமுன் தினம் (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்திரமன்றி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல எத்தனோல் கடத்தல்காரரை கைதுசெய்து பிணையில் விடுவிக்க உதவியமை தொடர்பிலும் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது .
ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அருந்திக பெர்னாண்டோ உடனடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றார். அவர் அழுதுகொண்டே தனது துயரத்தை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பிரதமர் தலையிட மறுத்ததை அடுத்து அருந்திகா பதவி விலக நேரிட்டது.