பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு இன்று உத்தரவிட்டார்.
விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைத்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் பலர் உள்ளமை விசாரணைகளில் புலனாவதாக மன்றில் இன்று தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் விடயங்களை முன்வைப்பதற்கு போதிய கால அவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் மற்றுமொரு ஊழியரையும் விடுதலை செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்தார்.
இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் குறித்த சந்தேகநபர்கள் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையென்பது விசாரணைகளில் தெரியவந்ததால் அவர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷர்லி ஹேரத் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதுவரை நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்படவில்லையென, பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தெரிவித்தார்.
சந்தேகநபரான குறித்த வைத்தியர் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு அவர் விசாரணை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தேவாலயத்தின் எந்த ஊழியரும் தொடர்புபடவில்லையென கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசாரணைகளின் ஆரம்பத்திலேயே தெரிவித்த விடயம், இன்று வரை நிரூபணமாகியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன இதன்போது குறிப்பிட்டார்.