தமிழக மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுமென்று என்றும் வன்முறையை தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் உடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவர்கள் விவகாரத்தில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக இரு தரப்பு மீனவர் குழுக்களிடையே விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினார்.
மேலும், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
சம உரிமை, அமைதி, நீதி மற்றும் மரியாதை, இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனக் கூறிய மத்திய அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.