ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காவலர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை ராமேசுவரத்தில் தீவிர ரோந்து பணியை போலீஸார் மேற்கொண்டனர்.
ராமேசுவரம் பேருந்து நிலையம்அருகே போலீஸாரைக் கண்டதும்தப்பி ஓட முயன்ற 5 பேரைச் சுற்றிவளைத்து பிடித்து சோதனையிட்டதில், அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ கோக்கைன் எனும் கொடிய போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸார் நடத்தியவிசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தியைச் சேர்ந்த சூர்யகுமார் (27), பாம்பனைச் சேர்ந்த மனோஜ் (20), சாதிக்(36), ராமேசுவரத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் (32), அங்குராமர் (36) எனத் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சரகம் காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராமேசுவரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (31), பாம்பனைச் சேர்ந்த சம்பத்ரேமண்ட் (23), ஜோசப் பாஸ்டின்குமார் (23), ஆகியோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கோக்கைன் போதைப் பொருளை மதுரையில் இருந்து பேருந்து மூலம் ராமேசுவரம் கொண்டு வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.