எரிபொருளுக்கான வரிச்சலுகை அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் தற்போதைய விலையினை தொடர்ந்தும் பேணுவதால், ஏற்படும் பாரிய நட்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே சுமப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதியின்மையினால் எதிர்வரும் காலங்களில் டொலரை பெற்றுக்கொள்வதும் சவாலானதாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டொலர் இன்மையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்படுமென அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு உடனடியாக எரிபொருளுக்காக வரிச்சலுகையை வழங்க வேண்டும் அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, லங்கா IOC நிறுவனத்தினால் கடந்த 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 184 ரூபா என அறிவிக்கப்பட்டது.
லங்கா IOC நிறுவனத்தினால் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 213 ரூபா என தெரிவிக்கப்பட்டது.
இந்நிறுவனத்தினால் ஒரு லீட்டர் டீசலின் விலையும் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
அதற்கமைய, லங்கா IOC நிறுவனத்தில் ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 124 ரூபா என அறிவிக்கப்பட்டது.