web log free
April 25, 2024

பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பு இன்று

2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த 5 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

பின்னர், வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்திருந்தபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்காது தவிர்த்துக்கொண்டனர். அதேவேளை சிலர் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனையடுத்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டது. இதற்கமைய 43 மேலதிக வாக்குகளால் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

அதனையடுத்து, வரவு -செலவுத்திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதங்கள் 13 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதியான இன்று தினம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அல்லது, வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.