''இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழாவை காண சொக்கநாதபுரத்தில் உள்ள அவரது பண்ணைக்கு செந்தில் தொண்டமான் சென்றிருந்தார்.
அவரை நாகபட்டினம் அக்கரைபட்டி சண்முகம், ராமேஸ்வரம் தேவதாஸ் தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர்.
அக்கரைபட்டி மீனவர்களின் 3 விசைப்படகை இலங்கை அரசு கைப்பற்றியது. இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரையும், 56 விசைப்படகுகளையும் மீட்பதோடு கைதான ராமேஸ்வரம் வேர்கோடு மீனவர் ராஜகுரு 48, பாஸ்கரனையும் 37, விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் செந்தில் தொண்டமான் கூறியதாவது:
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்தியா, இலங்கை பிரதமர்கள் மற்றும் இலங்கை யாழ்ப்பாண மீனவ அமைப்பும், தமிழக மீனவ அமைப்பும் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணலாம். மீனவர் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்கு மத்திய, மாநில அரசு முயற்சித்து வருகிறது , என்றார்.