விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு ரூ. 42 கோடியை மாற்ற சென்ற போது இலங்கை பெண் விமான நிலையத்தில் சிக்கியதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை நாட்டை சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ(40) என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளியாக இருந்த ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணா நகரில் தங்கி அந்த முகவரியை வைத்து ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு, இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது.
தடைச்செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் டெல்லி என்ஐஏவுக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் நடத்திய விசாரணையில், போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிற போலி ஆவணங்களுடன் பெங்களுரு வழியாக மும்பைக்கு இலங்கை பெண் செல்ல இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்று மும்பையில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்கில் இருந்து 42 கோடி ரூபாய் பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு தொடர்புடைய வங்கி கணக்கிற்கு மாற்ற சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மும்பையில் உள்ள வங்கி கணக்கு செயலிழந்து உள்ளதாக கூட்டாளிகள் தெரிவித்ததால், வங்கி கணக்கை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்காக வங்கி கணக்கு வைத்திருந்த நபரின் பெயரில் போலியாக சிம் பெற்று மாற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் வங்கி கணக்கு வைத்திருப்போரின் வாரிசு போல போலி ஆவணங்களை தயார் செய்து பணத்தை எடுக்க, மும்பைக்கு சென்ற போது இலங்கை பெண் பிடிப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கியில் இருந்த பணத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினரின் ஆதவாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்ற திட்டம் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மும்பையில் யார் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும், உலகம் முழுவதும் பரவி கிடக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தகவலை பெற என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.