சில வாரங்களுக்கு முன்னர் அனைத்து எதிர்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் பூட்டப்பட்டியிருந்த அறையொன்றில் சந்தித்தனர்.
இந்தக் கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த சந்திப்பின் இரண்டாவது கட்டமும் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இரண்டாவது விவாதம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையை நிர்வகிப்பது குறித்து கவனம் செலுத்தியது.
நான்கு முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திடுவதற்கும் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்த விவாதத்தில் ஒரு சிறப்புக் குறைபாடு இருந்தது.
முதலாவது கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது கலந்துரையாடலை புறக்கணித்தார்.
இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்த சுமந்திரனிடம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தொடர்பில் வினவிய போது விசேட காரணத்தினால் கலந்துரையாடலில் பங்குபற்றவில்லை என தெரிவித்திருந்தார். என்ன காரணம் என்று கூறவில்லை.
தற்போதைய ராஜபக்ச ஆட்சியை பாதுகாக்க ஐ.தே.க தலைவர் செயற்படுவதாக பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.வை சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் டீல் அரசியலில் ஈடுபடுவதாக அரசியல் களத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.
முதல் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்கு வெளியே சந்தித்தனர்.
அதுமட்டுமின்றி ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.