தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தனது வீட்டிலிருந்து தலவாக்கலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது தலவாக்கலை லோகி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் வெட்டிக் கொண்டிருந்த ஆலமரத்தின் கிளையொன்று உடைந்து பிரதான வீதியின் நடுவில் விழுந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளது.