ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமை பிரதிநிதிகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இலங்கை தொடர்பிலான விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற, அத்துமீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக ஐ.நா-வின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியையும் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட மேலும் வல விடயங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.