web log free
April 26, 2025

மகா சிவராத்திரி தின வாழ்த்து செய்தி

 மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

சிவராத்திரி தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும் ஆன்மிக பலம், ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டுவரும் சவால்களை வெல்வதற்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாக பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிவனுக்கு உகந்த நன்னாள் எடுத்துரைக்கும் நம்பிக்கை, உலக வாழ் மக்கள் அனைவரும் புத்தெழுச்சி பெறுவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, உண்மைத்தன்மை, தியாக மனப்பான்மை மற்றும் மன்னிப்பு வழங்கல் போன்ற உண்மைக் குணங்களுடன் வாழ்வதற்கான வழியமைக்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி தின ஆன்மிக செய்தியானது, ஒவ்வொருவரிடையேயான ஒற்றுமையை

மேலும் பலப்படுத்தும். ஆன்மிக சிந்தனை, உத்வேகம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் சிவனிரவு, அனைவரதும் நோக்கங்களை அடைய வழிவகுக்கும் நன்னாளாக அமைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு இனத்தவர்களும் மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், உங்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை தாயின் மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் சுபீட்சம் மிக்கதும் அபிலாஷைகள் அனைத்தும் கைகூடும் எதிர்காலம் அமைய இந்த சிவராத்திரி தினம் மிகவும் முக்கியமானது என்பது தமது நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

துன்பங்கள் என்ற இருள் நீங்கி இன்ப ஒளி எங்கும் பரவ வேண்டித்துதிக்கும் பக்தி மிகுந்த இந்த நாளில், அனைவருக்கும் சௌபாக்கியமே கிடைக்க இறையருளை மனதார வேண்டித்துதிப்போம் எனவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையான, உறுதியான குறிக்கோளுடன் உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான இந்து பக்தர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கும் ஆணவம் மற்றும் தற்பெருமையை இல்லாதொழிக்க உறுதுணையாக அமையும் ஞான ஔி பரவக்கூடிய தினமாகவும் உலக வாழ் இந்து மக்களுக்கு அமைதியையும் கருணையையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர வழிவகை செய்யும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாகவும் இந்த தினம் மலர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd