அரசாங்கத்தில் மக்கள் பிரச்சினை பேச களம் இல்லாததால் 11 அரசாங்கக் கட்சிகள் தனித்தனி மேடையில் நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
11 அரசாங்கக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 உறுப்பினர்களை அரசாங்கம் தனித்தனி மேடையில் நிறுத்துவது நல்ல விடயமல்ல எனவும், தன்னை இங்கு மேடை ஏற்ற அரசாங்கமே பொறுப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் நெகிழ்வாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்த சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவோ சந்தர்ப்பமாக அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 11 அரசாங்க பங்காளிகள் இணைந்து தயாரித்த ‘முழு நாடும் சரியான பாதையில்’ என்ற தேசிய விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.