web log free
April 27, 2025

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வினை வழங்கிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் , நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்ட ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு டீசல் வழங்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

எண்ணாயிரம் மெற்றிக் தொன் டீசல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன. மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான 37 ஆயிரம் மெற்றிக்தொன் மசகெண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று இலங்கை வரவுள்ளது.

அந்த எரிபொருள் களனிதிஸ்ஸ உள்ளிட்ட மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்று இடம்பெற்றது.

மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் பிரச்சினை எதிர்வரும் தினங்களில் தீர்க்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.


© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd