தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடியில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர் வினவியபோது, கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 500 ஏற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல எனவும், தேவைப்படும் போது தாம் அவ்வாறு செய்வதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களை ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார். இந்த கலந்துரையாடல் நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.