சென்னை போரூர், ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு கிலேசியஸ் (வயது 49). இவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 மகள்களுக்கு இந்திய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி இந்திய நாட்டு பாஸ்போர்ட் பெற்று உள்ளதாக புகார் வந்தது.
இதையடுத்து போரூர் போலீசார், ஜெரால்டு கிலேசியஸ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை குடிமகனான ஜெரால்டு கிலேசியஸ், 2007-ம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்து குடும்பத்துடன் போரூரில் வசித்து வந்தார்.
தனது குடும்பத்தினருடன் கனடா நாட்டில் குடிபெயர போலி ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு பெற்று அதன் மூலம் தனது மகள்களான மேரி ஜென்சிகா (23), ரெஜினோல்ட் (21), மேரி சன்ஜிகா (20) ஆகியோருக்கு இந்திய பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
5 பேர் கைது
இந்திய நாட்டு ஆவணங்களான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை போலியாக பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெரால்டு கிலேசியஸ், அவருடைய மனைவி மற்றும் 3 மகள்கள் என 5 பேரையும் கைது செய்தனர்.
முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் நிறுவுவதற்கு நிதி திரட்ட முயன்ற கும்பல் ஒன்றின் முயற்சியை கடந்த ஜனவரி 27-ந் தேதி அதிகாரிகள் முறியடித்தனர். அந்த கும்பலுடன் தொடர்புடைய லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ (51) என்ற பெண் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை தேசிய புலனாய்வுப்படையினர் தேடி வரும் நிலையில் இந்த கும்பலுக்கும், ஜெரால்டு கிலேசியஸ் குடும்பத்தினருக்கும் தொடர்பு உண்டா? என அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.