தேசிய லொத்தர் சபையினால் 2008ம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 8 மில்லியன் ரூபா பெறுமதியான கெப் வாகனமொன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் அதிகாரிகளது அனுமதியின்றி, அப்போதைய தலைவரினால் அந்த கெப் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இவ்வாறு தலைவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனம், அன்று முதல் இன்று வரை காணாமல் போயுள்ளதாக கோப் குழு முன்னிலையில் உறுதியாகியுள்ளது.
இந்த வாகனம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் உள்ளிட்ட முழுமையான நட்டம், 26 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஷரித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவே, அப்போதைய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றியிருந்தமையும் உறுதியாகியுள்ளது.
இந்த வாகனம் தொடர்பிலான ஆவணங்கள் அனைத்தும், தேசிய லொத்தர் சபை வசம் காணப்படுவதாக தெரிவித்த சபையின் அதிகாரிகள், வாகனமே காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்த வாகனத்திற்கு பணம் செலுத்தாமையினால், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனம், தேசிய லொத்தர் சபைக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பில், பணத்தை செலுத்துமாறு நீதிமன்றத்தினால், தேசிய லொத்தர் சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தின் பெறுமதி 80 லட்சத்து 95 ஆயிரம் ரூபா என்பதுடன், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் 68 லட்சத்து 28 ஆயிரத்து 360 ரூபா 83 சதம் வட்டி அறவிடப்பட்டுள்ளது.
அத்துடன், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் சட்டத்தரணிக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, தேசிய லொத்தர் சபை 16 லட்சத்து 74 ஆயிரத்து 185 ரூபா சட்டத்தரணிக்கான கட்டணமாக செலுத்தியுள்ளது.
இந்த அனைத்து தொகையும் உள்ளடங்கிய வகையிலேயே 16 மில்லியன் ரூபா கணிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை, கோப் குழு முன்னிலையில் அறிவித்தது.
எனினும், குறித்த வாகனம், தேசிய லொத்தர் சபையின் பயன்பாட்டிற்கு எடுக்கப்படவில்லை எனவும் கோப் குழு முன்னிலையில் தெரிய வந்தது.
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரண குணவர்தன இந்த வாகனத்தை பொறுப்பேற்றுள்ளதுடன், 2008ம் ஆண்டு மே மாதம் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன கெப் வாகனத்துடன், இரண்டு வாகனங்களை அவர் பயன்படுத்தியுள்ளதாக தேசிய லொத்தர் சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், காணாமல் போன வாகனம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியாது என லொத்தர் சபை அதிகாரிகள், கோப் குழுவிடம் கூறியுள்ளார்.