தலைமன்னார், பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா பெறுமதியான 1.240 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, குறித்த வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதுடன், 24 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஐஸ் போதைப் பொருள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.