இலங்கை விமானத்தில் கடத்தி வரப்பட்ட பழங்கால நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, இரண்டு இலங்கை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்கள், மிகவும் பழமையான நாணயங்களை மறைத்து வைத்திருந்தனர். அதுபற்றி கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். மிகவும் பழமையான அந்த நாணயங்களின் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது. அவை விலை மதிப்பில்லாதவை என அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறையினர், அவர்களிடம் இருந்த 12 பழங்கால நாணயங்களை பறிமுதல் செய்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த நாணயங்களை இவர்களிடம் கொடுத்தது யார், சென்னையில் யாரிடம் கொடுக்க வந்தனர் என அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.