இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டப்படி இடம்பெறும் என சில ரயில் மற்றும் தனியார் பஸ் சேவையாளர் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.
சம்பள பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள இந்த பணிப்புறக்கணிப்புக்கு ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளன.
இதேவேளை, அகில இலங்கை தனியார் பஸ் சேவையாளர் சங்கமும் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள புதிய அபராத தொகை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.