காணி விடுவிப்பு விவகாரங்களை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் பதிலளித்த அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் 13ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே எமக்கும் அந்த சிக்கல் இருக்குமென தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஆவேசப்பட்ட சம்பந்தன், மேசையில் ஓங்கி அடித்து 13ஆம் திருத்தச் சட்டத்தை கூட முழுமையாக அமுல்படுத்த முடியாவிட்டால் நாங்கள் ஏன் பேச வேண்டும், அரசாங்கம் எமது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பயனில்லை. நாம் எமது வழியில் பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதை அமுல்படுத்த முடியாதென நாம் தெரிவிக்கவில்லை. அதிலுள்ள சில முரண்பாடுகளையே குறிப்பிட்டோம். அதிகாரப்பகிர்வு குறித்து முரண்பாடுகளை நாமும் உருவாக்க விரும்பவில்லை. முழுமையான அதிகாரப்பகிர்விற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.