தற்போது அரச வளங்கள் அழிக்கப்படுவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, நாடு தேசிய வளங்களை இழந்து சர்வதேச சமூகத்திடம் பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், எண்ணெய்த் தாங்கிகள், கரையோரங்கள், தோட்டங்கள் உள்ளிட்ட அரச வளங்கள் வெளிநாடுகளுக்குச் சொந்தமாக இருந்தால் நாடு இருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பருப்பு, எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பெற இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து தலா 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பங்களாதேஷிடம் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்ற அரசாங்கம், கடனைத் தீர்ப்பதற்கு மேலதிக அவகாசம் கோரியதுடன், சிமெந்து மற்றும் இரும்பு பெறுவதற்கு பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பால்மா மற்றும் கோதுமைமா இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியுள்ள அரசாங்கம், உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதற்கு ரஷ்யாவிடமிருந்தும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றதாக சுட்டிக்காட்டினார்.
நாட்டை மேம்படுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டத்துக்கு முன்னுதாரணமாக செயற்படுவதற்கு தேசிய மக்கள் தயாராகவுள்ளதாகவும்
தமது சொந்த நலன்களுக்காக வளங்களையோ நிதியையோ சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் அனுமதிகள் இரத்து செய்யப்படும் அதேவேளை அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.