பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப்பெற்று மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்புகள் குறைவு என, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
மக்கள் தர்ப்பில் இருந்து பார்த்தால், ரணில் விக்கிரமசிங்கவை விட மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளதாகவும் அவரால் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் வெளியிடவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவால் பிரதமராக முடியும் என்று தெரிவித்த கே.டி.லால்காந்த, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கமொன்று மீண்டும் உருவாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்றும் கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணியால் ஒரு தடவையில் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ள கே.டி.லால்காந்த, தம்முடன் பயணிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை மக்கள் எடுக்கும் நிலைக்கு முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.