விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமைச்சரின் வருகை காரணமாக வெலிமடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்றிருந்த சிலர் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
"வெலிமடையில் நான் திட்டமிடப்பட்ட நிகழ்வு எதுவும் இல்லை, இது ஒரு தவறான புரிதல். எனது பெயரால் பரவிய வதந்தி" என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் அப்பகுதிக்கு வருவதாகக் கூறப்படும் தகவலையடுத்து வாகனங்கள் உட்பட வரிசையில் நின்ற பொதுமக்கள் வேறு பாதையில் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மீது கொதித்தெழுந்த மக்கள், நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தையும் கண்டித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து அசௌகரியங்களுக்கும் முதலில் தாம் மன்னிப்புக் கோர விரும்புவதாகக் கூறிய அமைச்சர், இது கடினமான காலங்கள், ஆனால் "நாங்கள் அவற்றை சமாளிப்போம்" என்று தான் நம்புவதாகக் கூறினார்.
வெலிமடையில் தமக்கு திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று மேலும் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இது தவறான புரிதல் மற்றும் வதந்தி என கூறினார்.