எதிர்வரும் சில நாட்களுக்கு டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அதன் தலைவர் சுமித் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த எரிபொருள் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசலை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் தற்போதைய உயர் விலையில் தொடர்ந்து எரிபொருள் விற்பனை செய்யப்படுமானால், இந்த ஆண்டு முழுவதும் எரிபொருளை இறக்குமதி செய்ய மட்டும் 5 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, டொலர் தட்டுப்பாடு காரணமாக 37500 மெற்றிக்தொன் டீசல் கப்பல் ஒன்று கொழும்பில் மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலுக்கு தேவையான டொலர்கள் இன்று செலுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.