இன்று இடம்பெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் பாரிய நடவடிக்கைகள் இடம்பெறலாம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் நேற்றுமாலை தீடிரென 36 மணித்தியால ஊரடங்கை அறிவித்தது, அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு சில மணிநேரங்களின் பின்னர் நேற்று மாலை ஆறு மணிமுதல் நாளை காலை ஆறு மணிமுதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் பாரிய விலை அதிகரிப்பு சமையல் எரிவாயு எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு பல மணிநேர மின்துண்டிப்பு உட்பட பல விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதே இந்த ஊரடங்கின் நோக்கம்.
ஜனாதிபதியின் உத்தரவின் பின்னர் இராணுவத்தினரை அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக ஆரம்பமான போதிலும் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் படையினர் பொலிஸாருக்கும் இடையிலான மோதலுடன் முடிவடைந்தது.
முப்படையினரும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்,பொலிஸாரை போல கைதுகளை மேற்கொள்ளமுடியும் என சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை சட்ட ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலைமையை கையாள்வதற்கு பத்தாயிரம் பொலிஸார் தயாராக உள்ளனர் என தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சர்கள் அரசாங்க அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளாவிய ரீதியில் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
ஊரடங்கின் மத்தியில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை எனஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரிலும் ஏனைய முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்வதற்காக படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,
இதேவேளை 36 மணிநேர ஊரடங்கு உத்தரவு குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
மக்கள் பட்டினி கிடப்பதன் காரணமாகவே வீதியில் இறங்குகின்றனர்,மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்மை காரணமாக அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்,தங்கள் குரல்களை எழுப்பும் மக்களிற்கான அரசாங்கத்தின் பதில் அவசரகாலநிலையை அறிவிப்பதும் ஊரடங்கை பிறப்பிப்பதுமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.