web log free
December 23, 2024

பெரும்பான்மை இல்லையென்ரால் பாராளுமன்றம் கலைக்கப்படும்

அரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது. அவ்வாறு பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால், பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
 
அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதையடுத்து தற்காலிகமாகவே அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்புக்கு இணங்கவே ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்ற முறையை மீறி செயற்பட முடியாது.ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கோரினார். அதன்படி அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்.
 
அதனையடுத்து அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அனைத்து கட்சிகளும் இணைந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகவே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.
 
ஜனாதிபதி ஒரு போதும் அரசியலமைப்பை மீறி செயற்பட மாட்டார். எமது அரசாங்கத்துக்கே தற்போது பெரும்பான்மை உள்ளது.
 
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்றால் அதனை எவரும் நிரூபிக்கலாம். அதன்படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்லலாம்.
 
அல்லது எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அவர்கள் ஆட்சி அமைக்கவும் முடியும். ஆனால் அவை எதுவும் இன்றி தன்னிச்சையாக செயற்படக் கூடாது.
 
மக்களின் பிரச்சனைகள், துன்பங்களை நாமும் அவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
 
அமைதியான முறையில் நாம் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்.
 
அதற்காகவே ஜனாதிபதியினால் சர்வ கட்சி மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் தேவைகள் மற்றும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd