அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை நியமனத்தை வழங்கவில்லை ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நேரடியாக தெரிவாகியிருந்தார்.
2018ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக, எதிர்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில் இரா.சம்பந்தன் அரசியலமைப்பு சபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டது.
இந்த நிலையில், அரசியலமைப்பு சபையில் இருந்து முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச விலகிய நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்துக்கு , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிப்பதற்கு, கடந்த 5ஆம் திகதி கூடிய அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பான பரிந்துரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த நியமனத்துக்கு, இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.