web log free
April 25, 2024

அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் அமைச்சுப் பதவி கிடைத்தால் நாளையே 'பல்டி' அடிப்பர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் கூட ´கோ ஹோம் கோட்டா´ என இன்று கோஷம் எழுப்புகின்றனர்.

எனவே, அராஜக ஆட்சியை முன்னெடுக்காமல், ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் நேற்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பழனி திகாம்பரம் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மலையகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்து மீட்டெடுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களும், இந்த அராஜக ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காக வீதியில் இறங்கிவிட்டனர்.

நாட்டில் எல்லா பகுதிகளிலும் அரச எதிர்ப்பு அலையே வீசுகின்றது. கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும்பாடு பட்டவர்களும், அணிதிரண்டு வாக்களித்தவர்களும், ´கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டும்´ என்பதை திட்டவட்டமாக இடித்துரைத்துவருகின்றனர். ஆனால் மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் ஜனாதிபதியும், ஆட்சியாளர்களும் அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள்கூட இன்று அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்கள் மக்கள் பக்கம் நின்று இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாளையே அமைச்சு பதவி கிடைத்துவிட்டால், மக்களை படுகுழிக்குள் தள்ளிவிட்டு ´பல்டி´ அடித்துவிடுவார்கள். எனவே, இந்த ஜனாதிபதியும், அரசும் வீடு செல்லும்வரை போராடுங்கள். நாம் உங்களுக்கு துணையாக நிற்போம்." - என்றார்.