web log free
March 28, 2024

20ஐ ஒழித்து ஜனாதிபதி அதிகாரங்களை குறைக்க சஜித் அணி தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று கூடிய SJB நாடாளுமன்றக் குழு, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் குழு தீர்மானித்துள்ளதாக கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் எம்.பி.க்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார். சில SLPP எம்.பி.க்கள் மற்றும் சுயேச்சையாக மாறத் தீர்மானித்தவர்களின் ஆதரவைத் திரட்ட முயற்சிப்பதால் எண்ணிக்கையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று கிரியெல்ல கூறினார். 

ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேமதாசவினால் முதலில் வலியுறுத்தப்பட்டது.