தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று சுதந்திரமாக செயற்படுவோம் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தமது தீர்மானத்தை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அவர்கள், இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பணி தற்போது மிகவும் அவசரமான பணி எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சுப் பதவிகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டி புதிய அமைச்சரவைக்கு அக்குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலொன்றையும் நடத்த உள்ளனர்.
இந்த பதின்மூன்று எம்.பி.க்களும் சுயேச்சையாகி எதிர்க்கட்சியில் அமர்ந்தால், அரசு பெரும்பான்மையை இழக்கும் என்பது உறுதி.
கடந்த அரசாங்கத்தில் இருந்து 41 பேர் ராஜினாமா செய்ததுடன், மேலும் மூவர் நேற்று பதவி விலகியுள்ளனர்.
இந்த 13 பேரும் வெளியேறினால், அரசிலிருந்து வெளியேறும் மொத்த எண்ணிக்கை 57 ஆக உயரும்.