இலங்கையில் 'ஒரே நாடு. ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான அஸீஸ் நிஸாருத்தீன் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
ரம்புக்கண பிரதேசத்தில் போலீஸ் அராஜகமாக நடந்து கொண்டமைக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலும், நாட்டில் எழுச்சி பெற்றுள்ள மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்..
தனது விலகலை அறிவிக்கும் கடிதத்தை - அவர் நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விலகல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
நாட்டு மக்கள் இன, மத மற்றும் கட்சி பேதங்களை மறந்து, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி வீதிகளில் இறங்கி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த அவல நிலைக்கு காரணம் அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயல்பாடுகள்தான் எனவும், தனது விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது துன்பங்களை, துயரங்களை, சீற்றங்களை ஜனநாயக ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக மக்கள் முன்னெடுத்து வரும் நிலையில், அவற்றினை அடக்கி ஒடுக்குவதற்கு போலீசார் மிகவும் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும் தனது கடிதத்தில் நிஸாருத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் அப்பாவி மக்கள் மீதான மனிதநேயமற்ற அடக்குமுறைச் செயற்பாடுகள், தேசிய மட்டத்தில் பெரும் கொந்தளிப்பையும், சா்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மேலும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
'ரம்புக்கணயில் நடந்த மக்கள் போராட்டத்தில், ஒருவரின் உயிரை பலியெடுத்தும் பலரை காயப்படுத்தியும் போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலானது, மனித உரிமையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குரியதாக்கி உள்ளது' எனத் தெரிவித்துள்ள அவர் ரம்புக்கண படுகொலைக்கு காரணமானவா்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில் கூறியுள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி மீது முஸ்லிம் சமூகம் மிகவும் அதிருப்தியுற்றிருந்த நிலையில்கூட, ஜனாதிபதி தனக்கு வழங்கிய நியமனத்துக்கு மதிப்பளித்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தான் செயலாற்றி வந்ததாகக் குறிப்பிடும் நிஸாருத்தீன், 'இந்நாட்டு அப்பாவி மக்கள் படும் அவஸ்தைகளையும், அவா்கள் மீது தொடுக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களையும், அநீதிகளையும் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் உறுப்பினராக தொடர்ந்து செயற்பட தன்னால் முடியாது எனவும் தனது கடிதத்தில் அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்துள்ளார்.
ஏன் இப்போது விலகல்?
மிரிஹான பிரதேசத்திலுள்ள ஜனாதிபதியின் வீடு, பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட மறுதினம் - தான் ராஜிநாமா செய்வதற்கு தீர்மானித்ததாகவும், தனது மகனுடைய சிகிச்சைக்காக இந்தியா சென்றமையினால் அப்போது ராஜிநாமா செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் கூறினார்.
மிரிஹானயிலுள்ள ஜனாதிபதியின் வீடு முற்றுகையிடப்பட்ட மறுநாள், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையொன்றில், அந்தத் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம்கள் இருந்தமை போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் வகையிலான சொற்பிரயோகங்கள் இருந்ததாகவும், இதனையடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து தான் விலகுவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டவர்கள் அரபு வசந்தத்தை ஏற்படுத்தப் போவதாக கோஷமிட்டதாகவும், அவர்கள் தீவிரவாதிகள் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அஸீஸ் நிஸாருத்தீன் சுட்டிக்காட்டினார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் 13 அங்கத்தவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் முஸ்லிம்கள், மூவர் தமிழர்கள். ஏனையோர் சிங்களவர்களாவர்.
சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு கலகொட ஞானசார தேரர், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.