எதிர்வரும் 28ம் திகதி நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தொழிலாளர் தேசிய சங்கம் பூரண ஆதரவு வழங்கும் என அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூலில் விடுத்துள்ள செய்தி வருமாறு,
"தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கம் என்ற ரீதியில் நாம் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.
எனவே எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்."