எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.
இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் மறைமாவட்ட ஆயரை திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கிலே என்ன மாதிரியான நிலைமை காணப்படுகின்றது என்பதை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
முப்பது வருடங்களாக இந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பழக்கப்பட்டவர்கள். நாங்கள் அஹிம்சை வழியில் போராடினோம். அதற்குக் கிடைத்தது அடியும் உதையும். அடக்குமுறையை எதிர்த்து ஆயுத வழியில் முப்பது வருடம் போராட்டம் இடம்பெற்று அதுவும் தவறி விட்டது. ஆகவே இனி என்ன செய்வதென்று தெரியாமல் இறைவனிடம் மன்றாடுகிறோம்.
இங்குள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் என்னிடம் கேட்டார். நான் அவர்களிடம் கூறினேன். ஒற்றுமை என்பது எமது அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் கிடையாது. பதவி தமது பரம்பரை சொத்து என்பது போல் அவர்கள் செய்யப்படுகின்றனர். ஏனையவர்கள் முன் வருவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அதுவே அவர்களது குணமாக இருந்தது” என்றார்.