web log free
December 23, 2024

இலங்கை மக்கள் மத்தியில் குறைந்தது ராஜபக்ஷக்களின் மவுசு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ குடும்பம் பதவி விலக வேண்டும் என்று இலங்கையில் நடந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் பாதிப்புகள் தொடர்பில் ‘மாற்று கொள்கைக்கான மையம்’ என்ற அமைப்பு இலங்கை முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது.

88 சதவீதம் பேர் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் எரிவாயு, எரிபொருள், பால்மா, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர்.

10-ல் 9 பேர் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும், ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

87 சதவீதம் பேர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இப்படி கருத்து தெரிவித்தவர்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஓட்டுப்போட்ட பெரும்பான்மை சிங்களர்களும் அடங்குவர்.

எனவே, பொருளாதார சிக்கல்களில் இருந்து தங்களை மீட்க ராஜபக்ஷ குடும்பத்தால் முடியாது என்று அனைத்து இனத்தினரும் கருதுவது தெரிய வந்துள்ளது.

 

58 சதவீதம் பேர் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும், 14 சதவீதம் பேர் சிறிது காலம் ஆகும் என்றும், 2 சதவீதம் பேர் மட்டும், விரைவிலேயே பொருளாதாரம் மீண்டெழும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

 

பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று தெரியாது என்று 26 சதவீதம் பேர் கூறினர். 96 சதவீதம் பேர் எல்லா கட்சி அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd