நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் மே 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று எதிர்கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இதனையடுத்து சபைக்கு வருகை தந்த சபாநாயகர், இன்று சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சி தலைவர்களின் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்தார். அதில் தீர்மானிக்கப்படுகின்ற அடிப்படையில் அந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலேயே சபை கூட்டப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக இன்று அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்குள் வந்த ஐக்கிய மக்கள் சக்தியினர் கோசங்களை எழுப்பினர். சபாநாயகர் இந்த இடத்துக்கு வராவிட்டால், அவரை வீட்டுக்காவலில் வைக்கவுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
சபாநாயகரை இன்று வீட்டுக்கு அனுப்பப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அ்த்துடன் போராட்டக்காரர்களை நாடாளுமன்றுக்குள் அழைத்து வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் தாம் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதியை ஒதுக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இதன்போது கோரினர் இதனையடுத்தே நிலைமையை கருத்திற்கொண்டு அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்ப்பு தீவிரமடைந்ததால் பின்னர் சபாநாயகர் பாராளுமன்றத்தை எதிர்வரும் 17ம் திகதிவரை ஒத்திவைத்தார்.